Lavanya Selvaraj's Blog

Posts Tagged ‘History

“காவிரி, தென்பெண்ணை, பாலாறு, (தமிழ் கண்ட) வையை பொருநை” என பாரதி இட்ட பட்டியலில் பெரியாறு இடம் பெறவில்லை. ஆனால், அதற்கு வேறு ஒரு சிறப்பு உண்டு.

இந்தியாவில் பாயும் பெரும்பாலான நதிகள் கிழக்கு, தெற்கு ஆகிய திசைகளில் பாய்கிற நதிகள். வடக்கு, மேற்குத் திசையில் பாய்கிற நதிகள் இரண்டுதான். ஒன்று நர்மதை. மற்றொன்று பெரியாறு. தமிழகத்தில் தோன்றினாலும் அது கேரளத்தை நோக்கிப் பாய்கிறது.

கேரளத்தில் பாயும் ஆறுகளில் மிக நீண்டதும், மிக முக்கியதுமான பெரியாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள சுந்தரமலை என்றழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள, சிவகிரி என்ற சிகரத்தில் தோன்றுகிறது.

முல்லையாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறுதோணி, கட்டப்பனையாறு, இடமலையாறு என்ற ஆறுகளைத் தன்னுடன் கோர்த்துக்கொண்டு, முன்னூறு கி.மீ. தூரம் நடந்து அரபிக் கடலில் கலக்கும் இந்த ஆற்றின் பெரும்பகுதி, – 244கி.மீ.- கேரளத்தில் பாய்கிறது.

கேரளத்தின் மின் தேவைகளில் 74 விழுக்காட்டை இந்த நதியின் வழி பெறப்படும் மின்சாரம்தான் நிறைவு செய்கிறது. கேரளத்தை வளப்படுத்தினாலும் இது தமிழ் நதிதான் என்பதை அது தன்னோடு எடுத்துச் செல்லும் மேலே குறிப்பிட்ட ஆறுகளின் தமிழ்ப் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். பெரிய ஆறு என்பதே தமிழ்ச் சொல்தானே?

தமிழின் சங்க இலக்கியங்களில் (ஐங்குறுநூறு, புறநானூறு) ‘சுருளியாறு’ எனக் குறிப்பிடப்படும் இதன் கரைகளில், ஒரு நாகரிகம் அடைந்த சமூகம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன.

பெரியாறு கடலில் கலக்கும் கொச்சி- எர்ணாகுளம் அருகே, பூதத்தன்கெட்டு என்று ஓர் அணைக்கட்டு இருக்கிறது. அந்த அணைக்கட்டின் கிழக்கேதான் சேரர்களின் தலைநகரான வஞ்சி அமைந்திருந்தது.

ஆண்டுதோறும் கணிசமாக மழை பெறுகிற பகுதியில் பெரியாறு தோன்றுவதால், வெள்ளம் என்பது அதன் வழக்கமான அம்சங்களில் ஒன்று. நான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மக்கள் பெரியாற்றின் கரைகளிலிருந்து குடிபெயர்ந்ததாக வரலாறு சொல்கிறது.

பெரும் மழை காரணமாக மலைகளைப் பெயர்த்துக்கொண்டு ஆறு பாய்ந்ததாகவும், அது கொண்டுவந்து சேர்த்த மண்ணால் உருவானதுதான் கொச்சிக்கு அருகில் கடலில் உள்ள ஓர் திட்டு என்கிறார்கள். இன்று வைப்பன் தீவு (Vyppin Island) என்றழைக்கப்படும் அந்த இடத்திற்கு வெள்ளைக்காரர்கள் வரும்முன் இருந்த பெயர் ஆழிமுகம்.

தமிழ்நாட்டில் தோன்றி, ஆண்டுதோறும் பெரும் வெள்ளப் பெருக்கோடு கேரளத்திற்குப் பாய்கிற இந்த நதியைக் கொண்டு தமிழகத்தின் வறண்ட பகுதிகளான ராமநாதபுரம் மாவட்டம், மதுரை மாவட்டத்தின் சில பகுதிகள் இவற்றின் தாகத்தைத் தீர்க்க முடியுமா என்ற எண்ணம் ஓர் ஆங்கிலேயரின் மனதில் உதித்தது. அதன் வடிவம்தான் முல்லைப் பெரியாறு அணை.

சிவகிரியில் தோன்றிய பெரியாறு, 48கி.மீ தொலைவு நடந்த பிறகு, முல்லை என்ற இன்னொரு ஆற்றைச் சந்திக்கிறது. அந்தச் சங்கமத்தில் ஓர் அணை கட்டி நீரைத் தேக்கி, அப்படித் தேக்கிய நீரைக் கிழக்குத் திசைக்குத் திருப்பி, ஒரு குகை வழியே மலையைக் கடந்து, தமிழகத்திற்குக் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டார் பென்னிகுக் என்ற அந்த ஆங்கிலப் பொறியாளர்.

அப்படி நீரைத் தேக்கினால், சுமார் 8,000 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கிப் போகும். அந்த நிலங்கள், அப்போது கேரளத்தின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த திருவாங்கூர் அரசருக்குரியவையாக இருந்தன.

எனவே, 1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, திருவாங்கூர் அரசருடன் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. நீரில் மூழ்கிப் போகும், 8,000 ஏக்கருக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம், 40ஆயிரம் ரூபாய் ஆண்டுதோறும், திருவாங்கூர் அரசிற்கு, சென்னை ராஜ்யம் கொடுத்துவிட வேண்டும்.

அந்தப் பணம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் நாணயமான சக்ரமாக இல்லாமல், பிரிட்டீஷ் நாணயத்தில் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் 999ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

பென்னிகுக் அணை கட்டத் தொடங்கினார். பிரிட்டீஷ் ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வந்து கட்டுமான வேலைகளைத் துவக்கினர். மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு, கட்டுமான வேலைகள் பாதி நடந்து கொண்டிருந்தபோது, ஏற்பட்ட வெள்ளம் அந்த முதல் முயற்சியை அடித்துக் கொண்டு போயிற்று.

போனது போனதுதான், இனி புதிதாக அணை கட்டப் பணம் ஒதுக்க முடியாது என்று பிரிட்டீஷ் அரசு கையை விரித்து விட்டது. அதனால், குக் சோர்ந்து போய் தன் முயற்சியைக்கைவிட்டு விடவில்லை. தன் சொந்த சொத்துக்களை விற்றும், கொஞ்சம் கடன் வாங்கியும் 9ஆண்டுகளில் அணையைக் கட்டி முடித்தார்.

1895ல் கட்டி முடிக்கப்பட்ட அணை, பிரச்சினை ஏதும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. ஆற்று நீர் பெரிதும், பாசனம், குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஏற்பட்ட அரசாங்கம், வளர்ச்சித் திட்டங்கள் பற்றி சிந்திக்கத் துவங்கியது. அணையில் தேக்கப்படும் நீர் ஒரு குகை (tunnel) வழியே திருப்பி விடப்பட்டு தமிழகத்திற்கு வருகிறது அல்லவா?

அந்தப் புனலின் வேகத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று 1955ல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கேரள அரசு, மூழ்கிப்போன நிலங்களுக்குக் கொடுக்கப்படும், ஏக்கருக்கு ஐந்து ரூபாய் என்ற தொகை மிகக் குறைவு எனவும் அதை உயர்த்தித் தர வேண்டும் எனவும் கோரியது.

அதனால், ஏக்கருக்கு 30ரூபாய் வீதம் ஆண்டுக்கு 2லட்சத்து 40ஆயிரம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு அந்தத் தொகை இப்போதும் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது.

1979ல் கேரள அரசு இடுக்கி என்ற இடத்தில் பெரியாற்றில் ஓர் அணை கட்டத் துவங்கியது. ஆற்று நீர் முல்லைப் பெரியாறு அணையைக் கடந்துதான், அது நிரம்பி வழிந்த பிறகுதான் இடுக்கிக்குப் போக முடியும்.

Idukki Arch Dam...

அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் ஒருமுறை லேசான நில நடுக்கமும் ஏற்பட்டது. இந்தக் காரணங்களைச் சொல்லி கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையில் அதன் முழுக் கொள்ளளவான 152அடிக்குத் தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ளக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என நிர்பந்தித்தது.

நிர்பந்தத்திற்குப் பணிந்த தமிழக அரசு, அணையை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வதாகத் தெரிவித்தது. இதையடுத்து, மத்திய அரசின் நீர்வளக் குழுமம் அணையை ஆராய்ந்து மூன்று வகையான பரிந்துரைகளை செய்தது.

அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152அடியில் இருந்து தாற்காலிகமாக 136அடியாகக் குறைக்கப்பட்டது. தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம்  சிற்றணையைப் (Baby Dam) பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவரை 2அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

கடந்த 27ஆண்டுகளாக பெரியாறு அணையில் அதன் முழுக் கொள்ளளவான 152அடிக்குப் பதிலாக 136அடியாக இருந்து வருகிறது. நீர்மட்டம்  குறைக்கப்பட்டு விட்டதால், நீரில் மூழ்கும் நிலம் 8,000ஏக்கராக இல்லாமல் 4,677 ஏக்கராகக் குறைந்துவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு 8,000ஏக்கருக்கான வாடகைப் பணத்தினை தவறாமல் செலுத்தி வருகிறது.

முழு நீர்மட்டம் 16அடி குறைக்கப்பட்டதால், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4டி.எம்.சி.யிலிருந்து 6.4டி.எம்.சி.யாகக் குறைந்துள்ளது. அதனால், இந்த அணையின் மூலம் பாசனம் பெற்று வந்த பகுதியில் உள்ள நிலங்களில் 1,25,000ஏக்கர் நிலம் தரிசாகி விட்டன. 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின் நிலையத்தில் 40சதவிகிதம் உற்பத்தி குறைந்துள்ளது.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இந்த இழப்புகளை ஏற்றுக்கொண்டு வருகிறது. இன்னொரு புறம், முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் நீரின் அளவு குறைந்ததனால், இடுக்கி அணை அதிகம் நீர் பெறுகிறது. அதைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை கேரளம் மீண்டும் தமிழ்நாட்டிற்கே விற்கிறது. அதனையும் தமிழகம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

 

Courtesy: புதிய தலைமுறை

For E Magazine:  http://www.puthiyathalaimurai.com/last-week

Advertisements

KEEP ON TRYING.....

All Date is always ripe to do Good

April 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Blog Stats

  • 38,843 hits

Twitter Tweets

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Top Rated

Top Clicks

  • None
Advertisements