Lavanya Selvaraj's Blog

Archive for the ‘Current Affairs’ Category

தமிழகம் எதிர்நோக்கும் வாழ்வா, சாவா பிரச்சினை முல்லைப் பெரியாறு மாத்திரம் அல்ல

கர்நாடகத்துடன் காவிரி நதிநீர் பிரச்சினை, ஆந்திராவுடன் பாலாற்றுப் பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு பிரச்சினை இவற்றுடன் அண்டை நாடான இலங்கையுடன் கச்சத்தீவுப் பிரச்சினைஎனத் தமிழகத்தின் எல்லைகளுக்கு அப்பால் நிலை கொண்டுள்ள பிரச்சினைகளின் விளைவாக தமிழக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது. தமிழகம் தனது நியாயமான உரிமைகளைப் பறி கொடுத்து வருகிறதோ?

காவிரி நீர் : வருமா? வராதா?

கர்நாடகத்தில் குடகில் உற்பத்தியாகும் காவிரி, சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ளது. கர்நாடக  மாநிலத்தில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் 450கி.மீ. தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது. கர்நாடகத்தைவிட அதிக தூரம் தமிழகப் பகுதியில் பாய்கிற  காவிரியாற்று நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கு என்பது அந்த மாநிலமாகப் பார்த்து நமக்கு அளிக்கிற பரிசோ, பிச்சையோ அல்ல.  அது தமிழகத்தின் உரிமை. ஒரு நதியின் மீதான உரிமை அது உருவாகும் மாநிலத்திற்கு மட்டுமல்ல, அதன் மூலம் பாரம்பரியமாகப் பாசனம் பெறும் பகுதிகளுக்கும் உண்டு என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இதற்கு Riparian water rights  என்று பெயர்.

1924ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்த சென்னை மாநிலத்திற்கும், மைசூர் அரசரின் ஆட்சியின்கீழ் இருந்த சமஸ்தானத்திற்குமிடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கு 427 டி.எம்.சி. தண்ணீர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, உபரிநீரின் அளவைக் கணக்கிட்டு, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு. அது ஒரு பிரிவு மட்டும்தான். ஆனால், அந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு மட்டும்தான், அது செயலிழந்துவிட்டது என்று திரிக்கத் தொடங்கியது கர்நாடகம். இதனால், 1971ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.

 

 

1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அதில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதில் தமிழகத்தில் விவசாயவேலைகளுக்கு ஏதுவாக, ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

ஆனால், இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்க மறுத்து விட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாட்டில் மழை கிடையாது. அப்போதுதான் குறுவை சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடி மூலமாகத்தான், விவசாயிகளின் வாழ்க்கைக்குத் தேவையான பணம் கிடைக்கும். காவிரித் தண்ணீர் முறையாகக் கிடைக்காததனால் குறுவை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது.

2005ம் ஆண்டு நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இடைக்காலத் தீர்ப்பில் 205டி.எம்.சி. என்று கூறிவிட்டு, இறுதித் தீர்ப்பில் அதைவிடக் குறைவாக 178 டி.எம்.சி. என்று கூறியுள்ளது நடுவர் மன்றம். அதையும் கூட ஏற்க மறுத்துவிட்டது கர்நாடகம்” என்கிறார், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகிய இரண்டையுமே ஏற்க மறுத்த கர்நாடகம், ‘தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது’ என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகமும், தமிழகமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. வழக்கு நிலுவையில் உள்ளது.

 

 

அப்படியானால், இப்போதும் சில நேரம் காவிரி நீர் தமிழகத்திற்கு வருகிறதே அது எப்படி? தமிழகத்தில் மழை இல்லாத ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீர் வருவதில்லை. அக்டோபர் மாதம் கிருஷ்ணராஜசாகர் நிரம்பியதும் அணை திறக்கப்படும். அதாவது, தண்ணீர் திறக்கப்படாவிட்டால் அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தில் வெளியேற்றப்படும் நீர்தான் தமிழகத்திற்கு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், கர்நாடகத்தின் வடிகாலாகத்தான் தமிழ்நாட்டை நடத்துகிறது கர்நாடகம்.

ஒப்பந்தங்களை ஒரு பொருட்டாக மதிக்காத கர்நாடகம், காவிரியின் துணை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி, காவிரி நீர்முழுவதையும் தேக்கி வைக்கிறது. 1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில், கர்நாடகத்தின் பாசனப்பரப்பு 11.2 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 25 லட்சம் ஏக்கருக்கும் மேல் அதிகரித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டின் பாசனப்பரப்பு முன்பிருந்ததை விட வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. முப்போக சாகுபடி செய்து வந்த நிலங்கள், தற்போது ஒரு போக சாகுபடி நிலங்களாகச் சுருங்கி விட்டன.

தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிற அரசியல் கட்சிகள் காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கைப் பெறுவதற்கு, உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கு மாற்றுப்பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதாவது, காவிரியில் நமக்கு உரிய பங்கு கிடைக்காது என மனதளவில் முடிவுக்கு வந்து, மாற்று வழிகளை யோசிக்கத் துவங்கி விட்டன.

பாலாறா? பாழாறா?

வடிநிலப்பரப்பிலும், தண்ணீர் அளவிலும் காவிரிக்கு அடுத்தபடியாக இருப்பது பாலாறு. கர்நாடகாவில் கோலார் அருகே நந்தி  மலைத்தொடரில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93கி.மீ.தூரமும், ஆந்திராவில் 33கி.மீ. தூரமும் கடந்து தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் 222 கி.மீ.ஓடி, சென்னைக்கு 100கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் இது கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடி (அதனால் இதற்கு குப்தகாமினி என்று கர்நாடகத்தில் பெயர்), பெத்தமங்களா என்ற இடத்தில் பூமிக்கு வெளியே வருகிறது. கண்ணுக்குத் தெரியாமல் ஓடுவதாலோ என்னவோ, கர்நாடகம் இதில் பிரச்சினை செய்வதில்லை. ஆனால், ஆந்திரம் தகராறு செய்கிறது.

தமிழகத்தில் பாலாற்றுப் படுகையின் பரப்பளவு 11,000கி.மீ. இப்படுகையில் வாழும் மக்கள் குடிநீருக்காவும், விவசாயத்திற்காகவும் பல நூற்றாண்டுகளாக பாலாற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். பாலாறு மூலமாக, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தன. காவிரி டெல்டா பகுதிக்கு அடுத்த படியாக தமிழகத்திற்கு அதிக நெல் விளைச்சலைத் தருவது பாலாற்று வடிநிலப்பகுதி. ‘அதெல்லாம் ஒரு காலம்’ என்று சொல்லும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. பாலாற்றில் தண்ணீருக்குப் பதிலாக கானல் நீரை மட்டுமே இன்று காண முடிகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் பெறுகிற 317 ஏரிகள் இன்று வறட்சியை நோக்கிச் செல்கின்றன. பாலாற்றில் இருந்து செல்லும் 606ஆற்றுக்கால்வாய்களின் நிலையும் அதோகதிதான்.

1802ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிகளில் புதிய அணைகளோ, நீர்த்தேக்கங்களோ, நீர் அமைப்புகளோ ஏற்படுத்தக் கூடாது. பாலாறு உட்பட 15 முக்கிய நதிகள் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்து இந்த உடன்படிக்கைக்கு மாறாக கர்நாடகம் செயல்பட்டு வருகிறது.

பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு 77 டி.எம்.சி. ஆனால், பாலாற்றில் இப்போது கனமழை காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. கர்நாடகத்தில் பல அணைகளைக் கட்டி, ஏராளமான தண்ணீரை அம்மாநிலம் எடுத்துக் கொள்கிறது. 45கி.மீ. தூரம் மட்டுமே பாயும் ஆந்திரப் பகுதியிலும் ஏராளமான தடுப்பணைகளை ஆந்திரா கட்டியுள்ளது. போதாக்குறைக்கு, தமிழகத்தின் எல்லைப்பகுதியான குப்பம் அருகே  250கோடி ரூபாய் செலவில் 160அடி உயரத்தில் தடுப்பணை ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சித்துவருகிறது ஆந்திர அரசு. இதன் மூலமாக ஆந்திரப் பகுதியில் 120கிராமங்கள் பயன் பெறும் என்றும், அங்கு புதிதாக கால்வாய் வெட்டப்பட்டு, சித்தூர்-திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளது ஆந்திர அரசு. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஆந்திர அரசின் அணை கட்டும் முயற்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அங்கு அணை கட்டப்படுமானால், தமிழ்நாட்டின் பாலாறு பாசனப் பகுதிகள்  நிரந்தரமாக பாலைவனமாக மாறிவிடும்.

                                                                                                                                                                                                                          –  ஆ. பழனியப்பன்

Courtesy:                    Puthiya Thalaimurai

Edition:                        29.12.2011

Cover Story:               பறிபோகும் தமிழக உரிமைகள்?

Page No:                      8 – 15

For E – Magazine:      www.puthiyathalaimurai.com

Advertisements

KEEP ON TRYING.....

All Date is always ripe to do Good

January 2018
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Blog Stats

  • 38,327 hits

Twitter Tweets

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Top Rated